Saturday, August 15, 2015

நற்றிணைக் காதல் !


’நற்றிணை’ இலக்கியத்தில் இடம்பெற்றிருக்கும் அழகிய காட்சி இது.

வருணனைகளும், உவமைகளும் அற்புதமாய் அமைந்திருக்கிறது. படித்தவுடன் ஆசிரியரின் கற்பனைத்திறன் ஆச்சரியப்பட வைத்தது.

காதலி இருக்கும் இடம் தேடிக் காதலன் வந்தான். அவள் கரம் பற்றி மார்புறத் தழுவினான்.

அவளோ விடுபட்டு விலகி நின்றாள்.

ஏன் பெண்ணே விலகி நிற்கிறாய்? என்று காதலன் கேட்டதும், புன்னை மரத்தைக் காட்டினாள் காதலி.

‘நீ என்னிடமிருந்து விலகி நிற்பதற்கும், இந்த புன்னை மரத்திற்கும் என்ன சம்பந்தம்?’ என்றான் தலைவன்.

நான் சின்னஞ்சிறுமியாக இருந்தபோது இந்தச் சோலையில் புன்னைக் காய்களை மண்ணில் புதைத்து விளையாடினேன். அவற்றுள் ஒன்று செடியாக முளைத்தபோது நெய்யும் பாலும் ஊற்றி வளர்த்தேன். உன்னைபோன்றே வளரும் புன்னையும் எனக்கு இன்னொரு மகள்தான் என்றாள் தாய்.

தங்கை புன்னை மரமாகப் பக்கமிருந்து பார்க்கும்போது, இந்த நங்கை நாணமின்றி உங்களைத் தழுவி நிற்பதோ பண்பாடு? என்றாள் தலைவி.

சிறிய விசயம்தான். ஆனால் இதன் கலைநயமோ வியக்க வைக்கிறது.

  

நேசிக்கப் பழகுவோம் !!!


பாதைகள் !


ஒரு இலக்கை நோக்கி,
சில நாட்கள் தொடர்ந்து பயணம் செய்ய நேரிடுகையில்..
முதல் நாளிலேயே,
இலக்கை எளிதாக இலக்கை
அடைந்துவிட்டாலும்..
பின்வரும் நாட்களில்,
அதே இலக்கிற்காக வெவ்வேறு
பாதைகளில் பயணம் செய்யத்துவங்குகிறேன்..
அந்த இலக்கை அடைவதற்கு
மிக எளிதான வழியையும்,
மிகக்கடினமான வழியையும்,
அறிந்துகொள்ள விழைகிறேன்..
ஒவ்வொரு வழியிலும் தோன்றும் இடர்களையும்,
அதை எவ்வாறு கடப்பதென்ற யுக்தியையும்
தெரிந்துகொள்கிறேன்..
ஒருவேளை இவை
மற்றொருநாள் எனக்கே உதவியாய்
அமையலாம்...
இல்லையேல்,
இதே இலக்கை அடைய
என்னிடம் உதவி கேட்பவருக்கு
எளிதாகவும் உறுதியாகவும்
வழிகாட்டிட இயலும்...
இவ்வாறே..
வாழ்க்கை என்னை
ஒவ்வொரு தருணத்திலும்
வழிநடத்தி வந்திருக்கிறது…



நேசிக்கப் பழகுவோம் !

மலரும் மலர்க்கொடியும்


நேற்றிரவு
வழக்கம்போல்
தூக்கம் வரவில்லை...

கடிகாரத்தின்
சிறியமுள்
பன்னிரண்டை
தொட்டிருந்தது..

வீட்டைவிட்டு
வெளியேறி
தெருவில்
நடக்கத்துவங்கினேன்..

சிறிது தூரம்
கடந்தபின்,
சத்தமின்றி
ஒருகுரல்
ஒலித்தது..

நண்பா
என்றழைத்தது..

தெருவோரத்தில்
முளைத்திருந்த
செடியில்
இன்முகத்தோடு
மலர்ந்திருந்த
செண்பகமலர்
அன்போடு
என்னை வரவேற்றது..

மயக்கும் மணம் வீசும்
மலரே
உன் பெயர் என்ன?

நண்பரே !
எனக்குப் பொதுபெயர் தவிர
வேறொரு தனிப்பெயரில்லை..!
எனக்கூறி
அழகாய் புன்னகைத்தது..

சரி !
நீ எவ்வாறு பேசுகிறாய்?
இம்மனிதர் வாழும் உலகில்
மந்திரங்களும் உண்டா?

இல்லை!
உம்மைப்போல
எமக்கும் உயிர் உண்டு..
ஆனால்
இவ்வுலகத்தார்
யாரும் அதை உணரமாட்டார்கள்..!
என்னை உணராதவிடரித்தில்
நான் பேசி என்ன பயன்?

மன்னித்துவிடு மலரே.
இயந்திர உலகத்தில்
இயற்கையை ரசிக்க
என் நண்பர்களுக்கு நேரம்
இருப்பதில்லை போலும்..

நண்பரே..!
கடந்துசெல்லும்
மேகங்களைப் பார்த்து
நான் வருத்தப்பட்டதில்லை..!
நின்று நீறுற்றும்
மேகங்களுக்கே நான்
நன்றி கூறுகிறேன்..!

அற்புதம் !
சரி! இங்கே எப்படி வந்தாய்?

அன்பரே!
நான் மலர்ந்தது இங்குதான்..
இங்கு வந்த கதை
வேண்டுமெனில்
என் தாயிடம் வினவுங்கள்..

சரி!
மலரைத்
தாங்கியிருக்கும்
மலர்க்கொடியே..
இங்கு
வேரூன்றிய விவரம்
கூறுவாயா?

மகிழ்வுடன் கூறுகிறேன்..
கேளுங்கள்..

நான்பிறந்து
இரண்டு நாளானபோது,
என்னை செடியோடு பிடிங்கி
வேறொரு இடத்தில்
ஊன்றினர்..
அதில்
நான்பிறந்த மண்ணின்
வாசனை இருந்தது..
ஆனால்
நான் நிலத்தில் இல்லை..
மாறாக
ஒரு சிறுதொட்டியில்
அடைக்கப்பட்டிருந்தேன்..
என்னைப்போலவே
என் நண்பர்கள்
பலரும்
இதே நிலையிலிருந்தனர்...

ஒருவாரம்
கடந்தபின்,
என்னையும்
என் நண்பர்களையும்
ஒரு வாகனத்திலேற்றி
நகர்வலம் வந்தனர்..
இடையிடையே
என் நண்பர்கள்
சிலர் காணாமல் போயினர்...

இரண்டாம் நாளும்
பயணம் தொடர்ந்தது..
இம்முறை
வாகனம்
இவ்விடத்தில்
திரும்புகையில்
நான்
தவறி விழுந்தேன்..

ஆனால்
என்னை எவரும்
கண்டுகொள்ளவில்லை..
உடலெங்கும்
காயங்களோடு
ஓரமாய் படுத்திருந்தேன்...

பின்,
அன்றிரவு
பெய்த மழையால்
தவழ்ந்துவந்த நீரும்
நீர் அரித்துவந்த
செம்மணலும்
என்னுயிரை
புதுப்பித்தன..
இவ்வாறே
இங்கே வேர்பிடித்து
வளர்ந்தேன்..

அன்பு மலர்க்கொடியே..
எம் நண்பர்களின்
செயல்களுக்காக
வருந்துகிறேன்..
அவர்களுக்காக
மன்னிப்பு வேண்டுகிறேன்..

அன்பரே..
அதற்கு அவசியமில்லை..
பச்சிளம்
குழந்தையையே
தயங்காமல்
குப்பையில்
வீசியெறியும்
மனம்படைத்த
மனிதர்கள்
மத்தியில்
எனக்கான
அன்பை எதிர்பார்க்க
இயலாதல்லவா...?

உயிரை
உருக்குலைக்கும்
உண்மையை
மென்மையாகக்கூறி
சிந்தனையை
தூண்டிவிட்டாய்..
மனம்
பதைபதைத்து
துடிதுடிக்கிறது..

இதுவரை
அமைதியாய்
இருந்த
மலர்
பேச தொடங்கிற்று...

நண்பரே!
என் நிலையும்
இதையொத்ததே...

நாங்கள்
சாமிக்கும் வேண்டும்,
சவத்திற்கும் வேண்டும்,
மங்கைக்கும் வேண்டும்,
மணத்திற்கும் வேண்டும்,
அழகுக்கும் வேண்டும்,
அலங்காரத்திற்கும் வேண்டும்..
ஆனால் இங்கு
எங்களை மதிப்பவர்களைவிட
மிதிப்பவர்களே அதிகம்..

உண்மைதான்..
உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன்..
எம் செய்கை நினைத்து
தலைகுனிகிறேன்..
எங்களை மன்னியுங்கள்..
எங்களுக்காக
வாழ்வை அர்ப்பணிக்கும்
உங்களுக்கு
தலை வணங்குகிறேன்..
உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து
எங்கள் வாழ்வை சீராக்க
உதவியமைக்கு
மனமார்ந்த நன்றிகள்..

எல்லா நாட்களும்
ஒரேமாதிரி இருப்பதில்லை..

கதிரவன் உதிக்க துவங்கிவிட்டார்..
விடிகின்ற பொழுது
மாற்றம் தரும் பொழுதாக
இருக்கட்டும்..

விரைவில் மீண்டும் சந்திப்போம் நண்பர்களே..
வருகிறேன்..

                


நேசிக்கப் பழகுவோம் !!!

தேவைகளில் தெளிவு தேவை !


இன்று நாளுக்கு நாள் ஒவ்வொருவரின் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன... இதில் நாம் சரியான தேவைகளைப் பூர்த்தி செய்கிறோமா என்பதில் அனைவருக்கும் தெளிவு தேவை..

சிந்தனையாளர் சாக்ரடீஸ் ஒவ்வொரு நாளும் கடைத்தெருவிற்கு சென்று, ஒவ்வொரு கடையிலும் உள்ள பொருள்களை உற்றுப் பார்ப்பாராம். ஆனால், அவர் எதையும் வாங்கியதில்லை.
ஒரு பொருளையும் வாங்காத நீங்கள் ஒவ்வொரு நாளும் கடைத்தெருவிற்கு வருவது ஏன்? என்று கடைக்காரன் ஒருவன் கேட்டபோது, ‘எவ்வளவு பொருள்கள் இல்லாமல் நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று அறிந்துகொள்ளவே அன்றாடம் வருகிறேன்’ என்று பதில் கூறினாராம் சாக்ரடீஸ்.

லண்டனில் பல்பொருள் அங்காடியை திறந்துவைக்க வேண்டும் என்று பெர்னாட்ஷா திறந்துவைக்க வேண்டும் என்று
அதன் உரிமையாளர் விரும்பி அழைத்தாராம்.
‘இந்த அங்காடியைத் திறந்துவைத்த நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ‘உலகில் எனக்கு அவசியமற்ற பொருள்கள் எத்தனை இருக்கின்றன என்பதை இங்கு வந்த பின்னரே அறிந்துகொண்டேன்’பேரறிஞர் பெர்னாட்ஷா.

கிரேக்கத் தத்துவஞானி டயோஜெனிஸ் உடைமைகளற்ற வாழ்வின் அர்த்தம் உணர்ந்தவர். ஒரே ஒரு கோப்பை மட்டும் அவருக்குச் சொந்தமாக இருந்தது. ஒரு நாள் ஆற்றங்கரை மணலில் அவர் படுத்திருந்தார். அப்போது ஒரு நாய் அங்கு வந்தது. ஆற்று நீரில் வாய் வைத்து அருந்தி அதன் தாகத்தைத் தீர்த்துக்கொண்டது. நாயின் செய்கையைப் பார்த்த டயோஜெனிஸ், தன்னிடமிருந்த கோப்பையை சுமையென்று உணர்ந்தார். அந்தக் கோப்பையை ஆற்றில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து நடந்தார்.

சாக்ரடீஸுக்கும், பெர்னாட்ஷாவுக்கும், டயோஜெனிஸுக்கும் புரிந்த வாழ்க்கை இரகசியம் நமக்குப் புரியவில்லையே?

நாம் அனைவரும் இவர்களைப்போல் வாழ முடியாதுதான். ஆனால் முடிந்தவரை முயற்சிக்கலாமே? தேவைகளை நெறிப்படுத்திக் கொள்ளலாமே.

ஒன்றிலிருந்து மற்றொன்று வித்தியாசமாகத்தான் இருக்கும். ஆனால் உலகில் அனைத்து வித்தியாசமான விஷயங்களிலும் நீந்திக் கரைசேர்தல் யாருக்கும் சாத்தியமில்லைதானே.

இல்லாதவற்றை அடைவதற்கு முயன்று இருப்பவற்றை அனுபவிக்காமல் இருந்துவிடக்கூடாது.  



நேசிக்கப் பழகுவோம் !

Friday, August 14, 2015

இன்று சுதந்திர தினம் !

இன்று சுதந்திர தினம்...

அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில்

ஆசிரியர்களும், அதிகாரிகளும் தேசியக்கொடியை ஏற்றி
நாட்டிற்கு மரியாதை செலுத்தி, இனிப்புகளை வழங்கி இப்பெரும் நாளை கொண்டாடுவது வழக்கமே !!!

வருடத்தில் இரு நாட்களில் மட்டுமே காணக்கிடைக்கும் அற்புதக் காட்சி !


கண்டிப்பாக பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியரோ அல்லது முதல்வரோ சுதந்திரம் பெறப் போராடியவர்களையும், அவர்கள் அனுபவித்த துயரங்களையும் நினைவுகூர்வது ஒரு சம்பிரதாயம் !

இதிலும் ஒரு நடைமுறை உண்டு..

சொற்பொழிவுக்குப் பின் தான் இனிப்புகள் வழங்கப்படும்.

முன்னமே வழங்கிவிட்டால்,
கட்டிடங்கள், மரம், செடிகொடிகளுடன் தான் அவர்கள் பேச முடியும். ஏனெனில் அவைகளால் இடம்பெற இயலாதல்லவா? ஒருவேளை இயன்றால் அவையும் நகர்ந்துவிடக் கூடும்...

மாணவர்களை உங்கள் பேச்சை கேட்டு அஞ்சி ஓட வைக்காதீர்கள். வெறுப்போடு அமரவைத்து திணிக்காதீர்கள்.


தயவுகூர்ந்து, இந்த மலட்டுப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியை இங்கே வாசிக்காதீர்கள்.

இந்நாளிலாவது அவர்கள் மனதில் புதிதாய் நான்கு விதைகளை தூவுங்கள்.

ஒரு முதியவர் எப்போதும் தன் பையில் நல்ல விதைகளை வைத்துக்கொண்டே இருப்பாராம்.

எங்காவது வெற்றிடங்களைப் பார்க்க நேர்ந்தால்,
சில விதைகளை எடுத்துத் தூவி விடுவாராம்.
ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டால்,
இன்று வெறுமையாக இருக்கும் இந்த இடத்தில் நான் நல்விதைகளை தூவி விட்டேன்..
என்றாவது ஒருநாள் நல்மரங்கள் வேர்விட்டெழக் கூடும் என்பாராம்.

அதுபோலத்தான் குழந்தைகளாக இருக்கும் மாணவர்களின் மனமும். இன்று நீங்கள் விதைக்கும் எண்ணங்களே நாளை மனதில் வேர்பிடித்து வளரும்.


வெறுமனே பழங்கதை பேசாமல், உண்மை நிலையை உணர வையுங்கள். ஒரு நல்ல மனிதனாய் எப்படி வளரவேண்டும் என்று வழிகாட்டுங்கள்.

அதுவே நாட்டின் நல்ல எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.

”வியாபாரம் செய்ய வந்தவர்கள்

அரசியல் நடத்தினார்கள்
அரசியல் நடத்த வந்தவர்கள்
வியாபாரம் செய்கிறார்கள்
இரண்டிலும் நட்டப்பட்டது மட்டும்
நாம்தானே இந்தியனே !”

என்ற வைரமுத்துவின் கவிதையையும் அவசியம் நினைவு கூறுங்கள். இனியாவது தேசியக்கொடி சுதந்திரமாய் பறக்கட்டும்.


இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் !




நேசிக்கப் பழகுவோம் !!!