Saturday, August 15, 2015

மலரும் மலர்க்கொடியும்


நேற்றிரவு
வழக்கம்போல்
தூக்கம் வரவில்லை...

கடிகாரத்தின்
சிறியமுள்
பன்னிரண்டை
தொட்டிருந்தது..

வீட்டைவிட்டு
வெளியேறி
தெருவில்
நடக்கத்துவங்கினேன்..

சிறிது தூரம்
கடந்தபின்,
சத்தமின்றி
ஒருகுரல்
ஒலித்தது..

நண்பா
என்றழைத்தது..

தெருவோரத்தில்
முளைத்திருந்த
செடியில்
இன்முகத்தோடு
மலர்ந்திருந்த
செண்பகமலர்
அன்போடு
என்னை வரவேற்றது..

மயக்கும் மணம் வீசும்
மலரே
உன் பெயர் என்ன?

நண்பரே !
எனக்குப் பொதுபெயர் தவிர
வேறொரு தனிப்பெயரில்லை..!
எனக்கூறி
அழகாய் புன்னகைத்தது..

சரி !
நீ எவ்வாறு பேசுகிறாய்?
இம்மனிதர் வாழும் உலகில்
மந்திரங்களும் உண்டா?

இல்லை!
உம்மைப்போல
எமக்கும் உயிர் உண்டு..
ஆனால்
இவ்வுலகத்தார்
யாரும் அதை உணரமாட்டார்கள்..!
என்னை உணராதவிடரித்தில்
நான் பேசி என்ன பயன்?

மன்னித்துவிடு மலரே.
இயந்திர உலகத்தில்
இயற்கையை ரசிக்க
என் நண்பர்களுக்கு நேரம்
இருப்பதில்லை போலும்..

நண்பரே..!
கடந்துசெல்லும்
மேகங்களைப் பார்த்து
நான் வருத்தப்பட்டதில்லை..!
நின்று நீறுற்றும்
மேகங்களுக்கே நான்
நன்றி கூறுகிறேன்..!

அற்புதம் !
சரி! இங்கே எப்படி வந்தாய்?

அன்பரே!
நான் மலர்ந்தது இங்குதான்..
இங்கு வந்த கதை
வேண்டுமெனில்
என் தாயிடம் வினவுங்கள்..

சரி!
மலரைத்
தாங்கியிருக்கும்
மலர்க்கொடியே..
இங்கு
வேரூன்றிய விவரம்
கூறுவாயா?

மகிழ்வுடன் கூறுகிறேன்..
கேளுங்கள்..

நான்பிறந்து
இரண்டு நாளானபோது,
என்னை செடியோடு பிடிங்கி
வேறொரு இடத்தில்
ஊன்றினர்..
அதில்
நான்பிறந்த மண்ணின்
வாசனை இருந்தது..
ஆனால்
நான் நிலத்தில் இல்லை..
மாறாக
ஒரு சிறுதொட்டியில்
அடைக்கப்பட்டிருந்தேன்..
என்னைப்போலவே
என் நண்பர்கள்
பலரும்
இதே நிலையிலிருந்தனர்...

ஒருவாரம்
கடந்தபின்,
என்னையும்
என் நண்பர்களையும்
ஒரு வாகனத்திலேற்றி
நகர்வலம் வந்தனர்..
இடையிடையே
என் நண்பர்கள்
சிலர் காணாமல் போயினர்...

இரண்டாம் நாளும்
பயணம் தொடர்ந்தது..
இம்முறை
வாகனம்
இவ்விடத்தில்
திரும்புகையில்
நான்
தவறி விழுந்தேன்..

ஆனால்
என்னை எவரும்
கண்டுகொள்ளவில்லை..
உடலெங்கும்
காயங்களோடு
ஓரமாய் படுத்திருந்தேன்...

பின்,
அன்றிரவு
பெய்த மழையால்
தவழ்ந்துவந்த நீரும்
நீர் அரித்துவந்த
செம்மணலும்
என்னுயிரை
புதுப்பித்தன..
இவ்வாறே
இங்கே வேர்பிடித்து
வளர்ந்தேன்..

அன்பு மலர்க்கொடியே..
எம் நண்பர்களின்
செயல்களுக்காக
வருந்துகிறேன்..
அவர்களுக்காக
மன்னிப்பு வேண்டுகிறேன்..

அன்பரே..
அதற்கு அவசியமில்லை..
பச்சிளம்
குழந்தையையே
தயங்காமல்
குப்பையில்
வீசியெறியும்
மனம்படைத்த
மனிதர்கள்
மத்தியில்
எனக்கான
அன்பை எதிர்பார்க்க
இயலாதல்லவா...?

உயிரை
உருக்குலைக்கும்
உண்மையை
மென்மையாகக்கூறி
சிந்தனையை
தூண்டிவிட்டாய்..
மனம்
பதைபதைத்து
துடிதுடிக்கிறது..

இதுவரை
அமைதியாய்
இருந்த
மலர்
பேச தொடங்கிற்று...

நண்பரே!
என் நிலையும்
இதையொத்ததே...

நாங்கள்
சாமிக்கும் வேண்டும்,
சவத்திற்கும் வேண்டும்,
மங்கைக்கும் வேண்டும்,
மணத்திற்கும் வேண்டும்,
அழகுக்கும் வேண்டும்,
அலங்காரத்திற்கும் வேண்டும்..
ஆனால் இங்கு
எங்களை மதிப்பவர்களைவிட
மிதிப்பவர்களே அதிகம்..

உண்மைதான்..
உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன்..
எம் செய்கை நினைத்து
தலைகுனிகிறேன்..
எங்களை மன்னியுங்கள்..
எங்களுக்காக
வாழ்வை அர்ப்பணிக்கும்
உங்களுக்கு
தலை வணங்குகிறேன்..
உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து
எங்கள் வாழ்வை சீராக்க
உதவியமைக்கு
மனமார்ந்த நன்றிகள்..

எல்லா நாட்களும்
ஒரேமாதிரி இருப்பதில்லை..

கதிரவன் உதிக்க துவங்கிவிட்டார்..
விடிகின்ற பொழுது
மாற்றம் தரும் பொழுதாக
இருக்கட்டும்..

விரைவில் மீண்டும் சந்திப்போம் நண்பர்களே..
வருகிறேன்..

                


நேசிக்கப் பழகுவோம் !!!

0 comments:

Post a Comment